Monday, 12 November 2012

தீபாவளி வாழ்த்துக்கள்




அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ... !

இன்று லட்சக்கணக்கில் விளம்பரம்  செய்து கோடிக்கணக்கில் லாபம்     பார்க்கும்  வர்த்தகமாக இருக்கும் தீபாவளிக்கு, ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த விளம்பரம் கீழே இருக்கும் படம் .

சென்னையில் பிரபலமான ராசி சில்க்ஸ், தங்கள் கடையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டதை அறிவிக்கும் விளம்பரம்  -  1957ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் இருந்து !






Sunday, 1 April 2012

இன்றைய தினத்துக்கான சிறப்புப் பதிவு !

'பொதிகை' என்ற பெயரெல்லாம் சூட்டப்படாமல் வெறும் சென்னைத் தொலைக்காட்சியாக விளங்கிய காலம் தொட்டே அதற்கென்று சில பாரம்பரிய வழக்கங்கள் உண்டு... அதில் முக்கியமான ஒன்று 'ஒளியும் ஒலியும்' (அல்லது ஒலியும் ஒளியுமா - நினைவில்லை) பாடல்கள்...

அதில் பாடல்கள் தேர்வு யார் பொறுப்போ தெரியாது, அனால் கட்டாயமாக அந்த வாரத்தில் வரும் பண்டிகை சம்மந்தமாக ஒரு பாடலாவது இருந்தே ஆகும் பட்டியலில்... தீபாவளி, கிறிஸ்துமஸ், புனித வெள்ளி, இவற்றுக்கெல்லாம் தவறாமல் பாடல் உண்டு... !

'ஒ ஒ' பிரபலமாக இருந்த காலத்தில் துரதிஷ்டவசமாக அன்னையர் தினம், மகளிர் தினம், இன்ன பிற தினங்கள் எல்லாம் இந்தியாவில் பிரபலமாகவில்லை... இருந்திருந்தால் நிச்சயம் அதற்கும் பாட்டு வைத்திருப்பார்கள்.. (அதுவும் 'அம்மா' பாட்டுகளுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமா என்ன...)


இன்று, கிராமங்களில் பஞ்சாயத்து டிவி பார்ப்பவர்களைத் தவிர வேறு எத்தனை பேர் பொதிகை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை... 'ஒ ஒ ' ஒளிபரப்பாகிறதா என்றும் எனக்கு தெரியாது... இருந்தாலும் பாரம்பரியத்தை விடக்கூடாது... அதுவும் இந்தியர்களுக்கு கலாச்சாரம் தான் எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம் என்பதால், பொதிகையின் பாரம்பரியத்தைத் தொடரும் பொறுப்பை நான் மேற்கொள்கிறேன்...


ஆகவே, மக்களே, தமிழ் கூறும் நல்லுலகத்து சான்றோர்களே, உலகப் பதிவுகளில் முதல் முறையாக கேட்டு மகிழுங்கள் ... இன்றைய தினத்துக்கான சிறப்பு பாடல் ...




( தமிழ்ப் பதிவு போட்டு பல காலம் ஆனதால், நமக்கு உகந்த இந்த நல்ல நாளில் எதாவது எழுதாமல் விட வேண்டாம் என்ற நல்லெண்ணத்தின் பேரில் உருவான  பதிவு :) )





Sunday, 25 October 2009

இலையுதிர் ...




வசந்தத்திற்கு சவால் விடும் வர்ண ஜாலம்,
வனங்களின் இந்த வானப்ரஸ்தம் ...
மரங்களின் இந்த மாலைப்பொழுது...
கடந்து போன வசந்தங்களைப் பற்றி கவலைகள் ஏதுமின்றி
எனக்கான வானப்ரஸ்தத்தை எதிர்நோக்கியபடி நான் ...

Wednesday, 30 September 2009

பெண்களைத் தாக்காதோ பிரிவுத் துயர் ?!

சில நாட்களுக்கு முன் எனது youtube பட்டியலில் பாடல்கள் சேர்த்துக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் தோன்றியது....

சினிமா பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் ஒன்று, ஆண்-பெண் இருவரும் சேர்ந்து பாடும் 'டூயட்' களாக இருக்கின்றன - இல்லையென்றால் பிரிவில் அல்லது தோல்வியில் ஆண்கள் மட்டும் பாடுபவயாக இருக்கின்றன....

காதல் தோல்வியில் பெண்கள் மட்டும் பாடுவதாக அமைந்த பாடல்களை சல்லடை போட்டு தேடினாலும் தேறுவது கஷ்டம் - எனக்குத் தெரிந்தவரை 'கண்டுகொண்டேன்' படத்தில் 'எங்கே எனது கவிதை' ஒன்று தான் இந்த வகையில் அமைந்தது...

ஏன், பெண்கள் காதலில் தோற்றால் மட்டும் பாட மாட்டார்களா ? பெண்கள் தண்ணி அடிப்பது தான் தமிழ் சினிமா விதிகளுக்கு அப்பாற்பட்டது - சோகத்தில் பாடக் கூடவா முடியாது நம் கதாநாயகிகளால் ?!

நிஜத்தில் ஆண்கள் அளவுக்கு பெண்கள் பாதிக்கப் படுவதில்லையா அல்லது காட்டிக்கொள்வது இல்லையா ?
பெண்கள் நினைக்க மறக்கிறார்களா அல்லது மறுக்கிறார்களா ? !

Friday, 17 July 2009

தாமல் தந்த செம்மல்

இன்று செய்தித் தளங்களைத் திறந்தவுடன் என்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்திய செய்தி இசை மேதை டி.கே. பட்டம்மாளின் மறைவு...
இசையில் பெரிய அளவில் ஞானமோ தேர்ச்சியோ இல்லாத எனக்கே எதையோ இழந்தது போன்ற உணர்வு...

டி.கே. பட்டம்மாள் இசையில் சிகரம் தொட்டவர் - சிகரத்தை அடைய அவர் பயிற்சி மட்டுமின்றி புரட்சியும் செய்ய வேண்டியிருந்தது ...
போர்க்கொடி தூக்காமல், போராட்டம் நடத்தாமல் அவர் செய்த மகத்தான புரட்சி, ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய கர்நாடக இசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கொண்டது... இன்று பட்டுப் புடவை பளபளப்பும் வைர மின்னல்களுமாய் மேடைக் கச்சேரி செய்யும் அனைத்துப் பெண் கலைஞர்களும் அவர் துவங்கி வைத்த பாதையை ஒரு கணம் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது...

பெயரும் புகழும் அடைந்தும் அவரிடம் நீங்காது இருந்த எளிமையும், தேச பக்தியும், கள்ளமற்ற உள்ளமும், இன்முகமும், அவரை நினைக்கும் போதெல்லாம் நம்மை நெகிழச் செய்யும்....
பக்தியையும் தேசப் பற்றையும் இசையோடு கலந்தளித்த அவரது குரல் என்றும் நம்மிடையே ஒலித்துகொண்டிருக்கும்...
அவர் விரும்பியது போல் எங்கும் சாந்தி நிலவ வேண்டும் என பிரார்த்திப்போம்...


Wednesday, 27 May 2009

மாற்றம்...

நம் தமிழ்ப் பத்திரிக்கைகள் வருடம் தவறாமல் சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன்கள் வெளியிடுவது போல் எங்களுக்கு வருடம்தோறும் இடப்பெயர்ச்சி என்பது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது ...

சென்ற வாரம் மீண்டும் இடம் பெயர்ந்தோம்... ஒரே வித்தியாசம், இந்த முறை ஊர் விட்டு ஊரெல்லாம் இல்லாமல் இப்போது இருக்கும் குடியிருப்பிலேயே இன்னொரு வீட்டுக்கு மாறினோம்...

ஒரு இடத்தை விட்டுச் செல்கிறோம் என்ற உணர்ச்சியோ புது வீட்டிற்குச் செல்லப் போகிறோம் என்ற எதிர்பார்ப்போ இன்றி மாற்றம் என்பதே இயற்கையான ஒன்று போல ஆகிவிட்டது.... ஒருவகையில் மாற்றம் என்பது தானே இயற்கை... ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு - 'மாற்றம் மட்டுமே நிலையானது' என்று.... உண்மைதான் ....

அடிக்கடி இட மாற்றம் செய்வதனால் கிடைக்கும் பலன் பல இடங்களைப் பார்ப்பதும், குறைந்த நேரத்தில் மூட்டை கட்டுவதில் நிபுணத்துவம் பெறுவதும் மட்டுமல்ல என்று நினைக்கிறேன்... மாற்றம் என்பது ஒரு வாழ்வியல் பாடமாக அமைகிறது.... எல்லா மாற்றங்களும் நாம் விரும்பும் வகையில் அமைவதில்லை....மாற்றம் சில நேரங்களில் ஏமாற்றங்களையும் தரக்கூடும்... அனால் மாற்றம் இயல்பானது, இயற்கையானது என்று மனம் ஒப்புக்கொள்ளும் போது பலவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத் தருகிறது.... ஏற்றுக்கொள்ளுதல் - 'acceptance' வரும்போது வாழ்க்கை சுலபமான ஒன்றாக ஆகிறது....

வாழ்க்கை ஒரு பயணம்... மாறிக்கொண்டே இருக்கும் காட்சிகளை ரசிக்கக் கற்றுக்கொளும்போதுதான் பயணம் இனியதாக ஆகிறது....

Saturday, 16 May 2009

தமிழ்ப் பேச்சு, பல் போச்சு

ஏதோ ஒரு திடீர் உந்துதலில் சில வாரங்களுக்கு முன் வீட்டில் இந்தியத் தொலைகாட்சி சேனல்கள் சிலவற்றின் இணைப்புக் கொடுத்தோம் .... அதில் தமிழில் விஜய் டிவியும் ஒன்று... எப்போதாவது சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைத் தவிர ஆர்வத்தைத் தூண்டும்படியாக எதுவும் இல்லை...

கேளிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் அபத்தங்களின் அணிவகுப்புகளுக்கு இடையே "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள் " என்று சிறுவர்களின் தமிழில் பேசும் திறனுக்கான ஒரு போட்டி ...
சிறுவர்களிடையே மொழிப்பற்றும், தாய்மொழியில் பேசுவதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும் தேவையான ஆற்றலும் வளர்க்கப்பட வேண்டிய ஒன்று ...
இத்தனை குழந்தைகள் தமிழில் தடையின்றி பேசப் பயிற்சி எடுத்துகொள்வதும், பேச முன்வருவதும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று...

அனால் ஒரு விஷயம் - பெரும்பாலான சுட்டிகள் ஏனோ ஆவேசமாய், பல்லைக் கடித்துக்கொண்டு, கைகளை ஆட்டி, நாடக பாணியில் முழக்கமிடுகிறார்கள்...
இனிமையாய்ப் பேசினால் தமிழ்ப் பற்று வளராதா என்ன ... ஏதோ தமிழில் வல்லினம் மட்டுமே உள்ளது போல் சொற்களை அழுத்தம் திருத்தமாய்க்  கடித்துத் துப்பி தவிடு பொடி ஆக்குவதை பயிற்சி கொடுக்கும் பெற்றோர் கொஞ்சம் கவனித்தல் நலம்...
அல்லது பால் பற்கள் தானே, போனால் போகட்டும், தொலைக்காட்சியில் பேசும் வாய்ப்புதான் முக்கியம் என்று நினைக்கிறார்களோ என்னவோ பெற்றோர் ... :)
எது எப்படியோ, சுட்டிகளே, சொல்லும் முக்கியம், பல்லும் முக்கியம் ... எனவே, மெல்லினம், இடையினம், ஆகியவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் :)